Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

திறந்தநிலை பல்கலைக்கழக வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் வாய்ப்பு?

கோவை

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், 90 கல்லூரிகளில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் பாடம் நடத்த வாய்ப்பளிக்கப்படுமா? என்று கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 42 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 38 முதுநிலைப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன. இதேபோல டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் என 60 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வசதிக்காக அரசு கலைக் கல்லூரிகளில் கற்றல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலமாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் நடத்தப்பட உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணையவழி வகுப்புகள் நடைபெறும். செமஸ்டர் தேர்வுகளையும் இம்மையத்திலேயே எழுதிக் கொள்ளலாம். அறிவியல் செய்முறை வகுப்புகளுக்கு அரசு கல்லூரி ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான நிதியை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

இந்நிலையில், கல்வி கற்போர் உதவி மையங்களில் வகுப்பு நடத்த அந்தந்த கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000 வீதம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. “ரூ.25 ஆயிரம் மட்டும் ஊதியமாகப் பெற்றுக்கொண்டு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களும் வகுப்பு நடத்த அனுமதித்தால், கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்றும், அதற்கு தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றும் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, “கல்வி கற்போர் உதவி மையங்களில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வரும் மார்ச் முதல் வகுப்புகள் தொடங்கும். இவர்களுக்கு பாடம் நடத்த கவுரவ விரிவுரையாளர்களுக்கும் வாய்ப்புஅளிக்கப்படும். அந்தந்த கல்லூரிகளில் கூட்டம் நடத்தப்பட்டு, துறைத் தலைவர்கள் மூலமாக வகுப்பு எடுக்க விருப்பம் உள்ளவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு, கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். யார், யார்? என்னென்ன பாடத்திட்டங்களைக் கையாளுவது? என துறைத் தலைவர்கள் மற்றும் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x