Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

பரபரப்பான கட்டத்தில் சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயம் கடைசி நாளான இன்று வெற்றிக்கு 381 ரன்கள் தேவை

சென்னை

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணிக்கு 420 ரன் களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளை யாடியது. விரைவாக ரன்கள் சேர்த்த வாஷிங்டன் சுந்தர் 82 பந்துகளில் தனது 2-வது அரை சதத்தை அடித்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய அஸ்வின் 91 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் நதீம் 0, இஷாந்த் சர்மா 4, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களில் நடையை கட்ட 95.5 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது இந்திய அணி.

ஆனால் இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 241ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அஸ்வினின் சுழலில் ஆட்டம் கண்டது. அஸ்வின்வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் எதும் எடுக்காமல் சிலிப் திசையில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து, டாம் சிப்லியை 16 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். டான் லாரன்ஸ் 18 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும், கேப்டன் ஜோ ரூட் 40 ரன்களில் பும்ரா பந்திலும் எல்பிடபிள்யூ ஆனார்கள்.

இஷாந்த் சர்மாவுக்கு இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 300-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்களை கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் இஷாந்த் சர்மா. இந்த வகையில் முதல் இரு இடங்களில் கபில்தேவ், ஜாகீர் கான் உள்ளனர். இஷாந்த் சர்மா இந்த மைல்கல்லை தனது 98-வது டெஸ்ட் போட்டியில் எட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணி 46.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 17.3 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஷபாஸ் நதீம் 2 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 420 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

ரோஹித் சர்மா 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தில் போல்டானார். இதையடுத்து புஜாரா களமிறங் கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 15, புஜாரா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 381 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

அஸ்வின் சாதனை...

2-வது இன்னிங்ஸில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அஸ்வின், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ரோரி பர்ன்ஸை (0) ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின். இதற்கு முன்னர் கடந்த 1907-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான பெர்ட் வோக்லர் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியிருந்தார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதன்முறையாக கடந்த 1888-ம்ஆண்டு இங்கிலாந்தின் பாபி பீல் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிபெங்களூரு – ஏடிகே மோகன் பகான்

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x