Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என, உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத் தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக ரூ.15.58 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 4 கட்டிடங்களுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகளின் கீழ் ரூ.6.53 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 15 கட்டிடங்கள் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார்.

பல்வேறு துறைகள் மூலமாக 3,852 பயனாளிகளுக்கு ரூ.11.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது: ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகத்தில் 400 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரு மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9,838 கோடி கடனுதவி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4900 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7550 எம்எல்டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் பிரச்சினையே வராது. படுகரின மக்களின் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x