Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப கல்வி அசாமில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப கல்வி போதிக்கும் கல்லூரிகளை தொடங்குவதே எனது கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டம், தேக்கியாஜுலி நகரில் நேற்று நடந்த அரசு நலத் திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது விஸ்வநாத், சராய்டியோ பகுதிகளில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க அவர் அடிக்கல் நாட்டினார். 'அசாம் மாலா' சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,100 கோடியாகும்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கல்வி கற்பிக்கும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு தொழில்நுட்ப கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே எனது கனவு. தாய்மொழியில் மருத்துவக் கல்வி கற்கும் மருத்துவர்கள், அந்த மாநில மக்களுடன் தாய்மொழியில் பேச முடியும். அவர்களின் உடல்நல பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் கிராமங்கள், குக்கிராமங்களில் திறமை குவிந்து கிடக்கிறது. விஸ்வநாத், சராய்டியோ பகுதிகளில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளால் கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவார்கள்.

வடகிழக்கு முன்னேறுகிறது

ஒரு காலத்தில் வடகிழக்கில் வன்முறை பதற்றம் நீடித்தது. தற்போது வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்து, அதிவேகமாக முன்னேறி வருகின்றன. இதில் அசாம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 2016-ம் ஆண்டு வரை அசாமில் 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது. விஸ்வநாத்தில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரி மூலம் வடக்குப் பகுதி மக்களும், சராய்டியோவில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரி மூலம் மேல் அசாம் பகுதி மக்களும் பலன் அடைவார்கள்.

குவாஹாட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும். அசாமில் முன்னர் ஆட்சி செய்த அரசுகள் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தற்போது ஆட்சி நடத்தும் பாஜக அரசு மக்களின் நலனுக்காக முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

தேயிலை தொழிலாளர்கள்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அசாமை சேர்ந்த 1.25 கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர். ஜன்ஆஷாதி குறைந்தவிலை மருந்தகங்கள், அசாம் அரசின் அடல் அம்ரித் யோஜ்னா மருத்துவக் காப்பீடு, பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தன் புரஸ்கார் மேளா திட்டத்தின் மூலம் அசாமில் 7.5 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக சதி

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சர்வதேச அளவில் சதி நடைபெறுகிறது. இந்திய தேயிலையைகூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

இந்திய தேயிலை குறித்து அவதூறு பரப்புவோரை சிலர் பாராட்டுகின்றனர். அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அவர்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அசாமின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் பல ஆயிரம்கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 'அசாம் மாலா' திட்டத்தின் மூலம்அனைத்து கிராமங்கள், நகரங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தப்படும். அசாம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அசாமில் முதல்வர் சர்வானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக சார்பில் இப்போதே தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23-ம் தேதி அசாமின் சிவசாகர் பகுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு லட்சம் பேருக்கு நிலப்பட்டா வழங்கினார். தற்போது மீண்டும் அவர் அசாம் நலத்திட்ட விழாவில் பங்கேற்று பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x