Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

கோவை, மதுரை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள காவல் மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி, சென்னைமவுன்ட், ஆவடி, சேலம், திருநெல்வேலி காவல் மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலனைப் பாதுகாப்பதில் தமிழக அரசு முன்னோடியாக தொடர்ந்து விளங்கி வருகிறது. காவலர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, காவலர்கள்மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான உயரிய மருத்துவ தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அனைத்து வகையான உயரிய சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அளிக்க ஏதுவாக, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனையை அனைத்து பிரதான மருத்துவத் துறைகளையும் உள்ளடக்கிய முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் அறிவித்தேன்.

தற்போது கோவை, மதுரை,திருச்சி மற்றும் ஆவடி மாநகரங்களில் காவல்துறையினருக்கான மருத்துவமனைகள், உள்நோயாளிகளுக்கான வசதியுடன் செயல்பட்டுவருகின்றன. இதுதவிர, சென்னைபுனித தோமையர் மலை, சேலம்மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் புற நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் காவல்துறையினருக்கான பகல்நேர மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை, 36 படுக்கைவசதிகள், எக்ஸ்ரே, இசிஜி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன்போன்ற நவீன உபகரணங்கள், முழுமையான மருத்துவ ஆய்வகங்கள், சிறிய சிகிச்சைகளுக்கான அறுவை அரங்குகளுடன், 24 மணிநேரமும் செயல்படும் முழு நேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உத்தரவிட் டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

50 போலீஸார் குடும்பத்துக்கு நிதி

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அரியலூர், செங்கல்பட்டு, சென்னை பெருநகர காவல், சென்னை வீராபுரம் சிறப்பு காவல்படை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 40 காவல் துறையினர் உடல் நலக்குறைவாலும், மேலும் 10 காவல்துறையினர் விபத்துகளிலும் உயிரிழந்தனர். இவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x