Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி உள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் போதிய கால அவகாசம் இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றால் ஏறக்குறைய ஓராண்டு காலத்துக்குப் பிறகு இந்திய மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் வலுசேர்க்கும். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுவிட்டதால் மற்றொரு இடத்துக்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றாலே உலக சாம்பியன் ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுவிடலாம். அதேவேளையில் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையானது ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோருடன் வலுவாக உள்ளது. இதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, மொகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களான உள்ளனர்.

இங்கிலாந்து அணி, இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற கையோடு இந்திய தொடரில் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி. துணை கண்ட ஆடுகளங்களில் ஜோ ரூட் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் அவரிடம் இருந்த சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும். தொடக்க வீரரான ஜாக் கிராவ்லி காயம் காரணமாக விலகி உள்ளது அணியை சற்று பலவீனமாக்கி உள்ளது. கிராவ்லி இல்லாதால் டோமினிக் சிப்லியுடன், ரோர்ரி பர்ன்ஸ் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும்.

சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்றது. கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தியிருந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நேரம்: காலை 9.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x