Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

எல்லையில் எந்த சவாலையும் முறியடிக்க ராணுவம் தயார் விமான கண்காட்சியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் உறுதி

எல்லைப் பகுதியில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலஹ‌ங்கா விமானப்படை தளத்தில் நேற்றுதொடங்கிய‌து. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதன் தொடக்க விழாவில் பங்கேற்று 13-வது ‘ஏரோஇந்தியா’ கண்காட்சியை தொடங்கிவைத்தார். 3 நாட்கள் நடக்கும் இந்தகண்காட்சியின் தொழில்நுட்ப அரங்கை கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்த பெரிய மற்றும் கூட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்புத் துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் ஆற்றலையும் பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறையில் நமது நாட்டில் உள்ள வாய்ப்புகளையும் உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டுகிறது. பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேரடியாகவும், பல நாடுகளின் அமைச்சர்கள் காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்த கண்காட்சியை பார்வையிட உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

பல முனைகளில் இருந்து இந்தியா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. எல்லைப் பகுதியில் எந்தசவாலையும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது. எந்த விலை கொடுத்தாவது இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் காக்க இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது.

இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே 1 ஏ ரக போர்விமானங்கள் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன்இந்தியா திட்டத்தில், கிடைத்த பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x