Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து பச்சை நிற தலைப்பாகையுடன் கோஷமிடும் காங்கிரஸ் உறுப்பினர்கள்.படங்கள்: ம.பிரபு

சென்னை

ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையைத் தொடங்கியதும், திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச வாய்ப்பு கேட்டார்.

உரையைத் தொடர்ந்த ஆளுநர், ‘‘தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். அப்போது, பேச வாய்ப்பு கேட்டு திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

நீங்கள் சிறந்த பேச்சாளர்கள்

அதற்கு ஆளுநர், ‘‘இது சரியல்ல. நான் கூறியதில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் பங்கேற்கும் கடைசி கூட்டத்தொடர் இது. எனவே, இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விவாதம் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்கள். கோபப்படாதீர்கள். ஒரு யோசனை சொல்கிறேன். வேண்டும் என்றால் வெளியே சென்றுவிட்டு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவைக்கு வந்து பங்கேற்கலாம்’’ என்றார்.

ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பு நான் எழுந்து பேச முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை பேச அனுமதிக்கவில்லை. ‘‘மத்திய அரசின் பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் வளம் பெறும்’’ என்று ஆளுநர் பேசினார். 2015 மத்திய பட்ஜெட்டில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. 2019-ல்மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. அதனால்தான் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ‘லாலிபாப்’ என்று விமர்சனம் செய்தேன்.

பேசியதில் பிடித்தது

ஆளுநர் பேசும்போது, ‘‘இதுதான் கடைசி பட்ஜெட்’’ என்றார். அவர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.

கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் ஊழல் புகார் கொடுத்தோம். அதுதொடர்பாக ஆளுநர் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர், அமைச்சர்களின் ஊழலுக்கு ஆளுநர் துணைநிற்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையிலும் ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை.

இவற்றை கண்டித்து ஆளுநர் உரை மட்டுமல்லாமல், இந்த கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிமுக அரசின் ஊழல்களை பேச சட்டப்பேரவையில் வாய்ப்பு கிடைக்காது. அதனால், நாங்கள் மக்கள் மன்றத்துக்கு சென்றுவிட்டோம். மக்கள் மன்றத்தில் ஆதாரங்களோடு சொல்வோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பச்சை தலைப்பாகையில் காங்கிரஸார்

பேரவையில் ஆளுநர் உரையின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பச்சை தலைப்பாகையுடன் வந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பச்சை நிற துண்டை தலைப்பாகையாக அணிந்து வந்ததாக காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆளுநர் உரையை புறக்கணித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பச்சை தலைப்பாகையுடன் கலைவாணர் அரங்கின் முகப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x