Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

பாஜக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் மதுரையில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

மதுரை பாண்டி கோயில் அருகே நேற்று இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். படம்: ஆர்.அசோக்

மதுரை

மதுரை பாண்டி கோயில் அருகே நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் மதுரை பாண்டி கோயில் அருகே சுற்றுச்சாலையில் நேற்று இரவு நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

5 மடங்கு அதிக நிதி

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு வழங்கிய நிதியைவிட பாஜக அரசில் 5 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. அதற்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி வழங்கி உள்ளது.

பாதுகாப்புத் துறை மூலம்சென்னை, சேலம், ஓசூரில்தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 56 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 8 கோடி மகளிருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.1,200 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெறுகின்றன.

தமிழர் மற்றும் தேச விரோதக் கட்சியாக திமுக செயல்படுகிறது. அதிமுக தமிழக நலன், தேச நலன் சார்ந்து செயல்படுகிறது. அதிமுக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசியத்தோடு இணைந்து செயல்பட்டனர். இதனால் அதிமுகவோடு இணைந்து பாஜக சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும். தமிழகம் முன்னேற்ற வேண்டும் என்றால் தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரையில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தமிழக பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு ஜே.பி.நட்டா தலைமை வகித்தார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

இதில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிடம் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கேட்பது, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், தேர்தல் பிரச்சார உத்திகள் குறித்து 2 மணி நேரம் ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர்கள் சுதாகர் ரெட்டி, சந்தோஷ், சி.டி.ரவி, தமிழகபாஜக தலைவர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மூத்த தலைவர்கள் எல்.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x