Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்டாட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைப்பு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டாட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 205 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 120 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காகவும், விவசாயிகள் அல்லாமல் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதைக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களுக்கும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில், தனி வட்டாட்சியர், சமூக நலத்திட்ட தனி வட்டாட்சியர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், 8 வட்டங்களிலும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளதுடன், இந்தக் குழுவினர் நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் ஆய்வு செய்து, அங்கு வரும் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொண்டுவரப்படுகின்றனவா? அல்லது வியாபாரிகளிடமிருந்து கொண்டுவரப்படுகின்றனவா என்பதை இனம் கண்டு, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர், அதை அறிக்கையாக மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்கொள்முதல் பணிக்கு தேவையான சாக்குகள் இருப்பு, கொள்முதல் செய்வதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதேனும் தொகை வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x