Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

மக்கள் தொகை அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை

மக்கள் தொகை அடிப்படையில் எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்துள்ளார்.

வேலூரில் பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் ஜன.29 (இன்று) நடைபெறுகிறது. இது 6-வது கட்டமாகவும், மாறுபட்ட போராட்டமாகவும் அமையவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் வன்னியர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் கரை வேட்டி, கொடிகளுடன் பங்கேற்க உள்ளனர். எம்பிசி இட ஒதுக்கீட்டில் அதிக மக்கள் தொகையுடன் வன்னியர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் குறைந்த இட ஒதுக்கீடு கிடைக்கிறது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டோம். தற்போது, எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுள்ளார். இதை அரசு நிறைவேற்ற காலம் தாழ்த்தக்கூடாது. இது சமூக நீதிக்கு இழைக்கும் அநீதியாகும். ராமதாஸின் 40 ஆண்டுகால போராட்டம் இது. அவரது போராட்டத்தால்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என தனி இட ஒதுக்கீடு உருவானது.

சமூக நீதி பிறப்பிட மாநிலமான இங்குதான் இவ்வளவு பெரிய குளறுபடி இருக்கிறது. ராமதாஸின் கோரிக்கை உள் ஒதுக்கீடு வழங்குவதுதான். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எம்பிசி பிரிவில் தான் உள் ஒதுக்கீடாக கேட்கிறோம் என்பதால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் பாமக கூட்டணியில் இருக்கும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது.

இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீடு பெறுவதற்கும் ராமதாஸ் தான் காரணம். அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்பில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார். இதன் மூலம் எல்லா சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் செய்துள்ளனர். இனியும் காலம் தாழ்த்தினால் வேறு விதமாக அமையும்.

தமிழகத்தில் வறட்சி காலத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ராமதாஸ் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். கூட்டணி தொடர்பாக வரும் 31-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது. இதில், கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்படும்’’ என்றார்.

அப்போது, மாநில துணை பொதுச்செயலாளர் கே.எல்.இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x