Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

மலை கிராமங்களில் விளையும் பொருட்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வரும் ஆண்கள் சுய உதவி குழுவினர் நகரங்களில் நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்த கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் இயற்கை சூழலில் விளையும் சாமை, தினை, புளி உள்ளிட்டவற்றை ஆண்கள் சுய உதவிக் குழுவினர் வெற்றிகரமாக சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வரு கின்றனர். இவர்களுக்கான நேரடி சந்தை வாய்ப்பை நகரப் பகுதியில் அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தின் கிழக்கு மலைத் தொடர் என வர்ணிக்கப்படும் ஜவ்வாதுமலைத் தொடரின் பெரும்பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட 3 கிராம ஊராட்சிகள் மட்டும் வேலூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. சுமார் 6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த மலை கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சுமார் 20 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன.

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இப்பகுதி மக்களை கைதூக்கி விடும் முயற்சியில் வேலூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. அரசின் பல்வேறு துறைகளின் மூலமாக ஏறக்குறைய ரூ.450 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தயாரித்துள்ளார். இதில், மலை கிராமத்தில் 2 தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மலை கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக சுமார் 300 பேர் அடங்கிய 24 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை மூலமாக புளி, சாமை, தேன் தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதில், ‘மருதம் ஆண்கள் சுய உதவிக் குழு மற்றும் வனக்குழு’ சார்பில் தேன், புளி, சாமை, நெல்லிக் காய், மாவள்ளிக் கிழங்கு, கடுக்காய், விளாம்பழம், சீதாப் பழம், பலாப்பழம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்டி வரும் இந்தகுழுவினருக்காக சந்தை வாய்ப்பு கள் அதிகம் உள்ள இடங்களில் கடை கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 மலை கிராம ஊராட்சிகளில் நெல், சாமை, தினை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுடன் சிகப்பு மிளகாய், தக்காளி, கத்திரி, பச்சை பயறு, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்படுகின்றன. ஏறக்குறைய 740 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. மலை கிராமங்களில் இயற்கையாக கிடைக்கும் மற்றும் விளையும் பயிர்களை சந்தைப்படுத்த புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஆண்கள் சுய உதவிக் குழுவின் முக்கிய நிர்வாகி யான அண்ணாமலை கூறும்போது, ‘‘எங்கள் குழுவின் மூலமாக சாமை,தினை, குதிரைவாலி, புளி, கம்பு, கேழ்வரகு, வரகு, கொள்ளு, கடுக் காய், மாவள்ளி கிழங்கு உள்ளிட் டவற்றுடன் வனப்பகுதியில் இயற் கையாக கிடைக்கும் தரமான, கலப்படம் இல்லாத தேனை பாட்டில் களில் அடைத்து விற்கிறோம். எங்கள் பொருட்களை சந்தைப் படுத்த ஊசூரில் ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கிய கடை நல்ல முறையில் லாபத்துடன் நடத்தி வருகிறோம். புதிய கடைகளை தொடங்க அனுமதி பெற்றுத்தருவ தாக ஆட்சியர் தெரிவித்திருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.

மலை கிராமங்களிலே முடங்கி யிருந்த இளைஞர்கள் இன்று நகரங்களின் சந்தையில் போட்டி யிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சரியான பாலமாக இருந்து வாய்ப் புகள் ஏற்படுத்திக் கொடுப்பதால் மலை கிராமங்களில் விளையும் பொருட்கள் நகர மக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி யாக கிடைக்கும். இவர்களுக்கு என்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x