Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிய கரோனா தொற்று காலம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

கரோனா தொற்றால் ரயில்கள் இயங்காதபோது, பல்வேறு வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:

50 கி.மீ தூரமுள்ள மதுரை - மானாமதுரை பிரிவு , 117 கி.மீ. நீளமுள்ள மானாமதுரை - மண்டபம் பிரிவு ஆகியவற்றில் மின்மயமாக்கல் பணிகள் நடக்கின்றன. இவை முறையே 2021 பிப்ரவரி, செப்டம்பரில் நிறைவு பெறும்.

17 கி.மீ தூரமுள்ள ஆண்டிபட்டி- தேனி பிரிவு, 15 கி.மீ நீளமுள்ள தேனி - போடிநாயக்கனூர் பிரிவு அகலப் பாதையாக மாற்றும் பணி முறையே 2021 ஏப்ரல், செப்டம்பரில் முடியும்.

கங்கைகொண்டான் - திருநெல்வேலி பிரிவில் நடைபெறும் இரட்டைப் பாதை பணி 2021 பிப்ரவரியில் நிறைவு பெறும். திருமங்கலம் - துலுக்கபட்டி பிரிவு, தட்டப்பாறை - மீளவிட்டான் பிரிவில் பணி ஏப்ரலில் நிறைவடையும். துலுக்கப்பட்டி - கோவில்பட்டி பிரிவு, கோவில்பட்டி - கடம்பூர் பிரிவு ஆகியவற்றில் நடக்கும் பணிகளும் 2021 மார்ச்சில் நிறைவு பெறும். மதுரை - திருமங்கலம் பிரிவில் நடக்கும் இரட்டைப் பாதைப் பணி 2022 மார்ச்சில் முடிவடையும்.

ரயில்களின் வேகம் கடம்பூர் - வாஞ்சிமணியாச்சி - கங்கைகொண்டான் பிரிவில் மணிக்கு 60 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டர் ஆகவும், மதுரை - திருச்சி பிரிவில் 100 கிலோ மீட்டரிலிருந்து 110 கிலோ மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களின் வேகம் டிசம்பரில் மணிக்கு 21 கிலோ மீட்டரிலிருந்து 44 கிலோ மீட்டராக உயர்த்தப் பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சரக்கு ரயில்கள் அதிக பட்சமாக 48 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப் பட்டன. மதுரை அருகிலுள்ள கப்பலூரில் செயல்படும் அரசு எரிபொருள் நிறுவனத்துக்கு திருப்பரங்குன்றத் தில் இருந்து தனி சரக்கு ரயில் பாதை விரைவில் தொடங்கப்படும். சென்னை ஐஐடி குழுவின் தொழில் நுட்ப ஆலோசனைப்படி பாம்பன் ரயில் பாலம் பராமரிக்கப்படுகிறது. கடையநல்லூர், வாஞ்சி மணியாச்சி, கங்கைகொண்டான், நாரைக்கிணறு, குண்டரா, ஸ்ரீவில்லிபுத்தூர், கல்லல், மேலக் கொன்குளம், பழனி, கோமங்கலம், திருப்பரங்குன்றம், அவனீஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்கென நடை மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. 17 ரயில் நிலையங்களில் நடை மேடைகள் நீட்டிப்பு செய்யப்படுகின்றன. டிசம்பர் வரை 33 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 25.71 கி.மீ. ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டன. 72 கி.மீ. ரயில் பாதையில் சரளைக் கற்கள் சலித்து மேம்படுத்தப்பட்டுள்ளன . 55 கடைகளில் ரூ. 14 கோடி செலவில் தயார்நிலை கழிவறைகள் நிறுவப்படுகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கரோனா தொற்றுக் காலத்தில் 42 தொழிலாளர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 43 ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. தீ விபத்தை தடுக்க, ரயில்கள் செல்லும் வேகத்தில் அதன் சக்கர அச்சில் ஏற்படும் வெப்ப நிலையைக் கண்டறிய ஒருங்கிணைந்த கண்காணிப்புடன் கூடிய சிறப்பு கருவிகள் கூடல்நகர், பரமக்குடி, கடம்பூர் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதுபோன்ற கருவிகள் காரைக்குடி, திண்டுக்கல், செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட இருக்கின்றன. கடந்த மூன்று மாதத்தில் 900 தொழிலாளர் களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப் பட்டுள்ளன. கரோனா நேரத்தில் ரயில்களை இயக்கிய பணியாளர்கள் காணொலிக் காட்சி மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x