Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

குடியரசு தின அணிவகுப்பு: முதல்முறையாக 2 பெண் பைலட்கள் பங்கேற்பு

புதுடெல்லி

குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக விமானப்படையைச் சேர்ந்த 2 பெண் பைலட்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நமது ராணுவ பலத்தை விளக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் முதல்முறையாக விமானப்படையைச் சேர்ந்த பாவனா காந்த், சுவாதி ரத்தோர்ஆகிய 2 பெண் பைலட்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். பாவனா காந்த் அணிவகுத்து வந்த வாகனத்தில் போர் விமானத்தின் மாதிரி வடிவம் இடம் பெற்றிருந்தது. பாவனா காந்த் 2016-ம்ஆண்டில் விமானப்படையில் அவனி சதுர்வேதி, மோகனா சிங்ஆகியோருடன் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார்.

2019- மே மாதத்தில் போர் விமானத்தில் பகல்நேர தாக்குதல்களில் ஈடுபடத் தகுதியான பெண் விமானியாக தகுதி பெற்றார். பாவனா காந்த் மிக் 21, சுகோய் ரக போர் விமானங்களை இயக்குவதில் திறமைவாய்ந்தவர். தற்போது ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.

மற்றொரு பெண் விமானி சுவாதி ரத்தோர், குடியரசு தின அணிவகுப்பில் ‘ஃப்ளைபாஸ்ட்’ எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல்பெண் விமானி என்ற பெருமையை பெற்றார். நான்கு ஹெலிகாப்டர்களை வழிநடத்தும் வகையில் எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டரில் சுவாதி ரத்தோர் பறந்தார். அப்போது, பார்வையாளர்கள் கைதட்டி தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் நாகார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் பிறந்த சுவாதி ரத்தோர், பள்ளி நாட்களிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு கண்டவர். 2014-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி விமானப்படை தினத்தை முன்னிட்டு நடந்த ‘ஃப்ளைபாஸ்ட்’ அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x