Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா கோலாகலம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

நாட்டின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் 72-வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை பகுதிக்கு வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ராஜபாதைக்கு வருகை தந்தார்.

பின்னர் ராஜபாதைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படை தளபதிகளை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன்பின் குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம்செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின் முக்கிய அங்கமான முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், அணிவகுப்பு கமாண்டராக, லெப்டினன்ட் ஜெனரல் விஜய்குமார் மிஸ்ரா தலைமையேற்று சென்றார். துணை கமாண்டர் கன்ஷியாம் சிங் தலைமையில், எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டக படைப்பிரிவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

குடியரசு தின அணிவகுப்பில், மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இரண்டு குழுக்கள் பங்கேற்றன. இந்த அமைப்பு உருவாக்கிய, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து கிளம்பும் இலகு ரகவிமானம் மற்றும் டாங்கி எதிர்ப்புஏவுகணை ஆகியவை அணிவகுப்பில் பங்கேற்றன.

முதன்முறையாக இந்த ஆண்டு, குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவவீரர்கள் கலந்துகொண்டனர். இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில், 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உலகின் அதிநவீன ராக்கெட் அமைப்புகளில் ஒன்றான, பினாகா மல்டி லாஞ்ச்சர் ராக்கெட் அணிவகுப்பில் இடம்பெற்றது. முற்றிலும், இது தானியங்கி முறையில் செயல்படும்.

இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வரும் பீரங்கிகளானடி-90 பீஷ்மா டாங்க் என்ற பீரங்கி அணிவகுப்பில் பங்கேற்றது. கேப்ன்கரன்வீர் சிங் பங்க், தலைமையில், இந்த பீரங்கி அணிவகுத்து சென்றது, மிக் ரகம் மற்றும் சுபோய் -30எஸ் போர் விமானங்களின் அணிவகுப்பும் கண்களைக் கவர்ந்தது.

ரஃபேல்

900 கிலோ மீட்டர் வேகத்தில் அதிநவீன ரபேல் போர் விமானம் விண்ணில் பறந்து அனைவரையும் வியக்கச் செய்தது.

பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான ரஃபேல் விமானத்துடன் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக விமானங்கள் பறந்து சென்றுசாகசத்தில் ஈடுபட்டன. மொத்தம்42 விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளைச் செய்தன. இதனையடுத்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. ரஃபேல் போர்விமானங்களின் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்ட்ர்-3 போக்குவரத்து விமானம், சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் சிறப்பு பணி விமானம், அபாச்சி ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர், சிஎச்-47எஃப் (ஐ) சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பறந்துவந்து சாகசம் செய்தன.

அலங்கார ஊர்தி

இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. முதல்முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 72-வது குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. மொத்தத்தில் இந்தியராணுவத்தைச் சேர்ந்த முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்பு அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, விமானப் படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x