Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

மத்திய அரசால் பத்ம விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மத்திய அரசால் பத்ம விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர்பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

முதல்வர் பழனிசாமி: தேனினும் இனிமையான தனது குரலால்தமிழக மக்களை மட்டுமின்றி இந்திய மக்களையும் கவர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை, வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், தமிழ் மொழிக்குஅரும்பணியாற்றி வரும் சாலமன்பாப்பையா,

வயது முதிர்ந்த போதிலும் விவசாயம் செய்யும் கோவை பாப்பம்மாள், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெய ராம்நாத், ஓவிய கலைத்துறையில் சிறந்து விளங்கிய மறைந்த ஓவியர்கே.சி.சிவசங்கர், சமூக சேவையாளரான கரூரைச் சேர்ந்த மாரச்சி சுப்புராமன், ஏழை, எளியமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருத்துவம் அளித்த மறைந்தடாக்டர் திருவேங்கடம் வீரராகவன், தஞ்சை தொழிலதிபர் தர்வேம்பு, சமூக சேவகர் மறைந்தசுப்பிரமணியன் ஆகியோருக்குபத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு எதிரிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் மேற்கண்டவிருதை பெற்ற அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திமுக முன்னோடியும் 103 வயதிலும்விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாளுக்கு பத்ம விருது கிடைத்துள்ளது. இதுஅவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, திமுக போராட்டங்களிலும் முன்நிற்பவர். அவருக்கும்,பத்ம விபூஷண், பத்ம பூஷண்,பத்ம விருது பெற்ற தமிழககலைச் செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 119 பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சிறப்புமிக்கபத்ம விருதுகளுக்கு தமிழகத்தில்இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.இவர்கள் சார்ந்திருக்கிற துறைகளில் இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன். மறைவுக்குப் பிறகு பத்ம விருது வழங்கப்படவுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார்,பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரும் பத்ம விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x