Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

தெற்கு ரயில்வேக்கு ரூ.2,173 கோடி வருவாய்

சென்னை

தெற்கு ரயில்வே 2020-21 நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம்வரை ரூ.2,173 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதன் பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே சார்பில், 72-வது குடியரசு தின விழா நேற்று பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று, புயல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இடையிலும் தெற்கு ரயில்வே பல்வேறு பணிகளை மேற்கொண்டது. இதன்படி, கடந்த ஆண்டு 224 கி.மீ. தூரத்துக்கு ரயில் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 11 ரயில்நிலையங்களில் மின்னணு இன்டர்லாக்கிங் பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 44 ரயில்வேமேம்பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.

கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையில் தற்போது 72 சதவீத சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 2020-21 நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை தெற்கு ரயில்வே ரூ.2,173 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.375 கோடி பயணிகள் சேவை மூலமாகவும், ரூ.1,561 கோடி சரக்கு சேவைகள் மூலமாகவும் கிடைத்துள்ளது.

சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி, ஓமலூர்-மேட்டூர் அணை ஆகிய வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வரும் 3-வது புதிய ரயில் பாதை நடப்பு ஆண்டில் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். திரு வாரூர்-காரைக்கால், மயிலாடு துறை-தஞ்சாவூர் ஆகிய வழித்தடங்கள் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தஆண்டுக்குள் கூடுதலாக 13 வழித்தடங்கள் மின்மயமாக்கப்படும்.

இவ்வாறு ஜான் தாமஸ் கூறினார். தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மண்டல மேலாளர் பி.மகேஷ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x