Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

டெல்லியில் விவசாயிகள் மீது தடியடி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: 2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பாஜகஅரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத்தான் அரசு நடத்தியதே தவிர, ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். பிரதமர் இனியும் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்துப் பேச வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் அறப்போரில் மக்களின் மனதின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்திருந்தால் இப்படி விவசாயிகளின் டெல்லி முற்றுகை வரலாறு காணாததாக ஆகியிருக்குமா?

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கடந்த 25-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் “நாடு விவசாயிகளுக்கு பெரும் நன்றிக் கடன் பட்டுள்ளது” என்றார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்து, போராடும் ஜனநாயக உரிமையை மறுத்து தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அமைதியாக போராடி வரும் விவசாயிகளை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி,அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மத்திய அரசின் இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து, 3 விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அரசு விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்ல முடிவு காண வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x