Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

நொய்யலாறு புனரமைப்புக்கு தனி கோட்டத்தை உருவாக்க வேண்டும் தமிழக முதல்வரிடம் `கோவை நீர்க்கரங்கள்' கூட்டமைப்பு வேண்டுகோள்

சுற்றுச்சூழல் சார்ந்து கோவையில் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பான `கோவை நீர்கரங்கள்' கூட்டமைப்பு சார்பில், கோவை வந்த முதல்வர் கே.பழனிசாமியிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

நீர்நிலைகள் மற்றும் பல்லுயிர் சூழலைப் பாதுகாக்கும் வகையில் நீர்வளத் துறைக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். நீர்நிலைகள் குறித்த தொன்மையான ஆவணங்களை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பதிவு செய்து, தமிழகத்தின் நில அமைப்பை, வருவாய்த் துறை வரைபடங்களுடன்கூடிய டிஜிட்டல் நீரியல் வரைபடங்களாக ஆவணப்படுத்த வேண்டும்.

கழிவுகளைக் கொட்டும் இடமாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கலக்கும் இடமாகவும் நொய்யலாறு மாற்றப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், கழிவு மேலாண்மைக்காக ஊராட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து வேறு பயன்பாட்டுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நொய்யல், அதன் கிளை நதியான கௌசிகா மற்றும் சங்கனூர் பள்ளம் பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும். நொய்யல் ஆறு புனரமைப்புக்கென செயற் பொறியாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் தனி கோட்டம் அமைக்க வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு-பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி இரண்டாம் திட்டத்தில் விடுபட்ட, தென்கிழக்குப் பகுதிகளான வெள்ளானைப்பட்டி, அரசூர், மோப்பிரிபாளையம், கணியூர், கிட்டாம்பாளையம் பகுதிகளை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x