Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

அமெரிக்க நிறுவனத்தின் பரஸ்பர நிதி மோசடி முதலீட்டாளர் பணத்தை மீட்க நடவடிக்கை என்ன? தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை

அமெரிக்க நிறுவனத்தின் பரஸ்பரநிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதிக்கான (மியூச்சுவல் ஃபண்ட்) பல்வேறு திட்டங்களை வழங்கி வந்தது. இந்த நிலையில் கரோனா பாதிப்பை காரணம் காட்டி எவ்வித முன்னறிவிப்புமின்றி 6 பரஸ்பர நிதி திட்டங்களை முடித்துக் கொண்டதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதன்மூலம் இந்நிறுவனம் நாடு முழுவதும் 3 லட்சத்து 15,621முதலீட்டாளர்களிடம் ரூ.28 ஆயிரம்கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக கோவையை சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர் அளித்த புகாரின்பேரில் சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுபோலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை எனக்கூறி, பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், பரஸ்பர நிதித் திட்டம் பாதுகாப்பானது என கிரிக்கெட் வீரர்கள் சச்சின், எம்.எஸ்.தோனி மற்றும் திரைப்பட பிரபலங்கள் விளம்பர பிரதிநிதிகளாக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அதை நம்பி பொதுமக்களும் இந்த திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். இதுவரை பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கப்பெற்ற தண்டனை குறித்தும் முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பதில் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இதுதொடர்பாக தமிழகஅரசு, டிஜிபி மற்றும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x