Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

உங்கள் மனதின் குரலை கேட்க வந்தேன்; என்னுடைய குரலை பேசவில்லை திருப்பூர் தொழிலாளர் கருத்தரங்கில் பிரதமர் மீது ராகுல் காந்தி விமர்சனம்

அவிநாசிலிங்கம்பாளையத்தில் உள்ள பேக்கரியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி.

திருப்பூர்

உங்கள் மனதின் குரலை கேட்கவந்தேன். என்னுடைய குரலை பேசவில்லை என்று திருப்பூர் தொழிலாளர்களுடனான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியை அகிலஇந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்தார்.

‘வாங்க ஒரு கை பார்ப்போம்’ என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக திருப்பூர் வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பல்லடம்சாலையில் நேற்று நடந்த ‘உழைப்பாளர்களின் உரிமையை மீட்போம்’ என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். அதில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்யவேண்டும். வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதேஎங்கள் கொள்கை. தேசிய ஊரகவேலை உறுதி அளிப்புத் திட்டம் நகர்ப்புறத்திலும் கொண்டுவரப்படும். சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பண மதிப்புநீக்கம், ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கை, தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் முதுகெலும்பை ஒடிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதிச் செயல். ஏழைகளின் வறுமை குறித்து பிரதமருக்கு தெரியாது. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது. வங்கிப் பணம் முழுவதையும் 10 முதல் 15 முதலாளிகளுக்கு அளித்துள்ளார். அதை அவர்கள் திருப்பி செலுத்துவதில்லை. ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு கொடுத்தகடனை திரும்ப செலுத்த கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி அமையும்போது, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்வோம். அதில் ஓய்வூதியம் என்பது பெரும்பங்காக இருக்கும்.

ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை பிரதமர் முன்னிறுத்த முயல்கிறார். தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதைபோல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்கலாம் என நினைக்கிறார். ஆனால், சுயமரியாதையை சார்ந்து இருப்பவர்கள் தமிழர்கள். நான் உங்களின் குரலை கேட்க வந்தேன். என்னுடைய மனதின் குரலை பேசவில்லை. உங்கள் குரலை என்றைக்காவது பிரதமர் மோடி கேட்டுள்ளாரா? முதலாளிகளின் குரலை மட்டும்தான் கேட்பார்.

நாட்டில் இருப்பவர்களை மேம்படுத்த, குடும்பத்துக்கு மாதம்ரூ.72 ஆயிரம் கிடைக்கும் வகையில், புரட்சிகரமான திட்டத்தை காங்கிரஸ் கொண்டுவரும். தொழிலாளர்கள் மீது பண மதிப்புநீக்கத் தாக்குதல்போல, விவசாயிகளின் மீது வேளாண் திருத்த சட்டங்கள் ஏவப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வரும்போது, அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள கடையில் அமர்ந்து ராகுல்காந்தி தேநீர் அருந்தினார். திருப்பூர் குமரன் பூங்காவில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘எல்ஐசி, பிஎஸ்என்எல், வங்கிகள் என பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் காப்பாற்றியது. தனியார் துறைக்காக பொதுத்துறையை அழிக்கக்கூடாது. ஜியோவுக்காக பிஎஸ்என்எல் அழிக்கப்படுகிறது. காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று,ராகுல்காந்தி தலைமை பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் ஜெகநாதன், எல்பிஎஃப்மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் ரெங்கராஜ் உட்பட பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x