Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

இந்திய - மியான்மர் எல்லையில் ரூ.28 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் மத்திய நிதி அமைச்சகம் தகவல்

இந்திய – மியான்மர் எல்லையில் ரூ.28 கோடி மதிப்பிலான 55.61 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மியான்மரில் இருந்து பெருமளவு வெளிநாட்டு தங்கம், மியான்மர் - இந்திய எல்லை வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் டெல்லி அருகே 5 பயணிகளை, டெல்லி மண்டல டிஆர்ஐ அதிகாரிகள் மடக்கினர். இதுபோல் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 3 பயணிகளை லக்னோ மண்டல டிஆர்ஐ அதிகாரிகள் மடக்கினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 55.61 கிலோ எடையுள்ள 335 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.28 கோடி. கடத்தல் தொடர்பாக 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்திய – மியான்மர் எல்லையில் கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதற்காக டிஆர்ஐ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் தொடர்ந்து பெருமளவில் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 2020 நவம்பரில் 51.33 கிலோ மற்றும் 66 கிலோ, ஆகஸ்ட்டில் 84 கிலோ கடத்தல் தங்கத்தை குவாஹாத்தி மண்டல டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x