Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

தோல்வியை கண்டு துவளாமல் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட கிரிக்கெட் அணியிடம் இருந்து வாழ்க்கை பாடம் கற்போம் அசாம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

அசாமின் தேஸ்பூர் பல்கலைக்கழக 18-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

தேஸ்பூரை சேர்ந்த பூபென் டா, ஜோதி பிரசாத் அகர்வாலா, விஷ்ணு பிரசாத் ரபா உள்ளிட்டோர் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை செய்தனர். நமது முன்னோர்கள் அனைவரும் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். இதேபோல இன்றைய இளைஞர்கள், `சுயசார்பு இந்தியா' திட்டத்துக்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்து உழைக்க வேண்டுகிறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பல்வேறு சவால்களை சந்தித்தது. வீரர்கள் காயம் அடைந்தனர். அணியில் அனுபவம்மிக்க வீரர்கள் இல்லை. எனினும் இளம் வீரர்களின் மன உறுதி அசைக்க முடியாததாக இருந்தது. தோல்வியை கண்டு துவளாமல் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டனர். கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்தினர். மிக வலிமையான அணியை தங்களது திறமையாலும் மன உறுதியாலும் வீழ்த்தி வெற்றிவாகை சூடினர்.

இந்திய கிரிக்கெட் அணியிடம் இருந்து இளைஞர்கள் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையில் 3 விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது நமது திறமை மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இரண்டாவது, நேர்மறையாக சிந்தித்து முழு பலத்துடன் உழைக்க வேண்டும். மூன்றாவது, சவாலான பாதையை தேர்ந்தெடுத்து துணிச்சலுடன் போராடி வெற்றி பெற வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான போரில் தன்னம்பிக்கையும் துணிச்சலும்தான் நமது நாட்டை மீட்டது. விரைவாக, துணிச்சலாக, புத்திசாலித்தனமாக முடிவெடுத்தோம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தால் நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தியில் நமது திறனைப் பார்த்து ஒட்டுமொத்த உலகத்துக்கும் நம்பிக்கை பிறந்தது.

உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டம், கழிப்பறை கட்டுமான திட்டம், குழாய் குடிநீர் இணைப்பு திட்டம், சுகாதார காப்பீடு திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறோம்.

குறைந்த செலவில் தண்ணீரை சுத்திரிக்கும் தொழில்நுட்பத்தை தேஸ்பூர் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. உலகின் முன்னணி நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக இந்திய பல்கலைக்கழகங்கள் உருவெடுத்து வருகின்றன. இதை ருத்தில் கொண்டு கல்வியின் தரத்தை மேலும் உயர்த்த புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்துக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்காகவும் உழைக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இன்றைய மாணவர்கள் சர்வதேச அளவில் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x