Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

வெள்ளையின வாதத்துக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அமெரிக்காவை ஒன்றிணைக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

அமெரிக்காவை ஒன்றிணைப்பேன் என்று புதிய அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார். முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. 152 கால வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தது இதுவே முதல்முறை.

எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உட்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில் ஜோ பைடன் கூறியதாவது:

அதிபர் தேர்தல் வெற்றியைஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து பூரிக்கிறேன். அமெரிக்காவில் இரண்டாம்உலக போரைவிட கரோனாவால்அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தஇக்கட்டான நேரத்தில் அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.

அமெரிக்க அரசியலில் அண்மை காலமாக பிரிவினைவாதம் தூண்டப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளை இனவாதம் தலைதூக்கி வருகிறது. சில சக்திகள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றன. இது அமெரிக்காவுக்கு புதிதல்ல.

இனவாதத்துக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அமெரிக்க மக்கள்ஒற்றுமையை பேணி காப்பாற்ற வேண்டும். இதற்கு ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் காட்டிய வழியில் நடக்க வேண்டும். எனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவை ஒன்றிணைப்பேன். மக்களை ஒன்றிணைப்பேன்.

வெறுப்புணர்வு, வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களிடையே அன்பை விதைக்க வேண்டும். ஒரு நாட்டில் ஒற்றுமை இல்லையென்றால் அந்த நாட்டில் அமைதி இருக்காது, வளர்ச்சி இருக்காது, வன்முறை தலைதூக்கும்.

உலகம் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை மாற்ற முடியாது. எனினும் நிகழ்காலம், எதிர்காலம் நம் கையில் உள்ளது. நாட்டின் அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய அரசு முனைப்புடன் செயல்படும்.

சர்வதேச அளவில் கரோனா வைரஸ், இனவாதம், பருவநிலை மாறுபாடு ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா முக்கிய பங்காற்றும். உலகின் நன்மைக்காக பாடுபடும் நல்லரசாக அமெரிக்கா உருவெடுக்கும். இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

17 கையெழுத்து

புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் நாளிலேயே 17 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதன்படி முந்தைய அதிபர் ட்ரம்பின் முக்கிய கொள்கை முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை சுவர் கட்டுமானம் நிறுத்தப்படும். பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும். உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும். குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது விதிக்கப்பட்ட பயண தடைகள் ரத்து செய்யப்படுகிறது. குடியேற்ற கொள்கையில் சீர்திருத்தம் செய்யப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய அலுவலகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

ட்ரம்ப் கடிதம்

பதவி விலகி செல்லும் அதிபர்,புதிய அதிபருக்கு கடிதம் எழுதிவைத்து செல்வது மரபு. அதன்படிமுந்தைய அதிபர் ட்ரம்ப் கடிதம்எழுதி வைத்திருந்தார். இது குறித்துபைடன் கூறும்போது, “ட்ரம்ப் பரந்தமனதுடன் கடிதம் எழுதியுள்ளார். இது தனிப்பட்ட கடிதம். இதுகுறித்து பகிரங்கமாக கூற முடியாது. விரைவில் ட்ரம்ப்புடன் பேசுவேன்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவடைய அவரோடு இணைந்து பணியாற்றுவேன். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்திய - அமெரிக்க உறவை முன்னெடுத்துச் செல்ல அவரோடு பேச காத்திருக்கிறேன். இந்திய, அமெரிக்க உறவு ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலன் அளிக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x