Last Updated : 22 Jan, 2021 03:17 AM

 

Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

கடுமையான சுவாச பிரச்சினை காரணமாக‌ விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது

கடுமையான சுவாசப் பிரச்சினை காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலம் முடிந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிவாஜி நகரில் உள்ள பவுரிங்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

பின்னர் பவுரிங் மருத்துவமனையின் டீன் மனோஜ்குமார் கூறுகையில், “சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் குறைந்துள்ளது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, ஆக்ஸிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் சீராக உள்ளது. காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு, உணவை அருந்தினார். சுவாச பிரச்சினை இருப்பதால் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். அங்கு 3 நாட்கள்வரை சசிகலா இருக்க வாய்ப்பு இருக்கிறது''என்றார்.

இதையடுத்து நேற்று பிற்பகலில் சசிகலா பலத்த போலீஸ்பாதுகாப்புடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவரை பார்த்து உறவினர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். இதனால் உற்சாகம் அடைந்தசசிகலா ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போதுஅருகில் சென்ற டி.டி.வி.தினகரன்உள்ளிட்ட உறவினர்களிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார்.

விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் நுரையீரலில் லேசான தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். மேலும் சசிகலாவுக்கு கடுமையான சுவாச பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மாலைமீண்டும் சசிகலாவுக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா நேற்று இரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து கரோனா வார்டின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்மாதத்தில் இருந்து வெளியே இருந்து வந்த பார்வையாளர்களை சந்திக்காத நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விக்டோரியா மருத்துவமனைக்கு வந்த டி.டி.வி.தினகரன், “சசிகலா நலமாக இருப்பதால், தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவரை சந்திக்க எங்களை அனுமதிக்கவிட்டாலும், அவருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்தாலே போதும். நுரையீரலில் லேசானதொற்று இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சசிகலா விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துவிடுவார். எனவே தொண்டர்கள் யாரும்பெங்களூருவுக்கு வர வேண்டாம். அவருக்காக கடவுளிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x