Last Updated : 22 Jan, 2021 03:18 AM

 

Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

இடிந்துவிழும் நிலையில் சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்: விரைவில் சீரமைத்து தர உரிமையாளர்கள் வலியுறுத்தல்

கோவை சிங்காநல்லூர் அருகே உழவர் சந்தை பின்புறம் வீட்டு வசதி வாரியம் சார்பில் 1984-ல் 11 ஏக்கரில் 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இக்குடியிருப்பில், குறைந்த, நடுத்தர மற்றும் அதிக வருவாய் உடையவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள், 350 நடுத்தர வீடுகள் மற்றும் 48 பெரிய வீடுகள் கட்டப்பட்டு, தவணைத் தொகை அடிப்படையில் பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

இந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்கு மேலானதாலும், முறையாகப் பராமரிக்கப் படாததாலும் பெரும்பாலான வீடுகள் பழுதடைந்து காணப்படு கின்றன. வீடுகளின் தரை, சுற்றுச்சுவர், மேற்கூரைகள் பெயர்ந்தும், சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட் டும், சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகின்றன.

இந்த இடத்தை ஆய்வு செய்தவருவாய்த் துறையினர், குடியிருக்கத் தகுதியற்ற கட்டிடம் என 2017-ல் நோட்டீஸ் வழங்கினர். வீடுகள் இடிந்து விபத்து ஏற்படும்முன், அவற்றைக் காலி செய்யுமாறுநோட்டீஸில் வலியுறுத்தியிருந்த னர். இதையடுத்து, சுமார் 300 பேர்தங்களது வீடுகளைக் காலி செய்துவிட்டனர். மற்ற வீடுகளில் இருப்போர் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

960 வீடுகள் கட்ட திட்டம்

சிங்கை நகர அடுக்குமாடி வீடு உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் ஜெயராமன் கூறும்போது, ‘‘அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, மொத்தமுள்ள 11 ஏக்கரில்3.33 ஏக்கரில் மட்டும் 960 வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி, வீட்டு வசதிவாரியத்தினர் உத்தேச வரைபடம் தயாரித்துள்ளனர். நாங்கள் அதைஒப்புக் கொள்ளவில்லை.

எங்களுக் குரிய இடத்தில் வீடுகளை கட்டித் தர வேண்டும். குறிப்பிட்ட ஏக்கரில் மட்டும் வீடு கட்டித் தந்துவிட்டு, மீதமுள்ள ரூ.200 கோடி மதிப்பிலான நிலத்தை வீட்டுவசதி வாரியத்தினர் எடுத்துக் கொள்வது சரியல்ல. இது தொடர்பாக திமுக நடத்தும் போராட்டத்துக்கு பல்வேறு குடியிருப்போர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன" என்றார்.

சிங்கை நகர பாரதி வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் குணசீலன் கூறும்போது, ‘‘பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகளை கட்டித் தருமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தினோம். இது தொடர்பாக வீட்டு வசதி வாரியம் அளித்த உத்தேச வரைபடத்தில் சில மாற்றங்களை செய்யவலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தற்காலிகமாக வீடுகளை மாற்றிக் கொள்வதற்கு ஃஷிப்டிங்கட்டணம், குறிப்பிட்ட மாதங்களுக் கான வாடகையைத் தருமாறு வீட்டுவசதி வாரியத்திடம் வலியுறுத்தியுள் ளோம். திமுக போராட்டத்துக்கும், எங்கள் சங்கத்துக்கும் தொடர் பில்லை’’ என்றனர். சில வீட்டு உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்குவதில் எங்களுக்கு விருப்பமில்லை’’ என்றனர்.

வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் கரிகாலன் கூறும்போது, ‘‘பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு 3.33 ஏக்கரில், 960 வீடுகள் கட்டித்தர வரைபடம் தயாரித்து, குடியிருப்பு சங்கத்தினரிடம் அளித்துள்ளோம். சங்கத்தினர் மாறுபட்டகருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அடுத்த சில தினங்களில் நாங்கள் இறுதி நோட்டீஸ் அளிக்க உள்ளோம். மீதமுள்ள இடத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டி விற்கப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருவாய், புதிதாக 960 வீடுகளைக் கட்டியதால் ஏற்படும் செலவுத் தொகையில் சரி செய்யப்படும்’’ என்றார்.

போர்க்கால நடவடிக்கை தேவை

சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். மேலும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. 2019 டிசம்பர் 15-ம் தேதி இங்கு ஆய்வு நடத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை அரசாணைகூட பிறப்பிக் கவில்லை. எனவே, திட்டத்தை செயல்படுத்த தனி அதிகாரியை நியமித்து, புதிய வீடுகள் கட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x