Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

காங்கயம் அருகே பழையகோட்டைப்புதூர் ஊராட்சியில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால் இடைநிற்றலுக்கு வாய்ப்பு கிராமப்புற குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம்

திருப்பூர்

காங்கயம் அருகே பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்ற பல ஆண்டுகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள உயர்நிலைப் பள்ளி பட்டியலில் எங்கள் பள்ளி இடம்பெறவில்லை. கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது, 35 பள்ளிகளை மட்டுமே தரம் உயர்த்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்கள் ஊரில் 10-ம் வகுப்பு வரை பள்ளியை கொண்டுவர பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.பழையகோட்டைபுதூர், கண்டியன்கிணறு ஆகிய இரண்டு கிராமப்புற குழந்தைகளும் உயர்நிலைக் கல்வியை எட்ட இந்த பள்ளி பயன்படும்.

ஆனால், தற்போது பழைய நிலையிலேயே இருப்பது வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 9, 10-ம் வகுப்புகளுக்காக 5 கி.மீ. தொலைவைக் கடந்து, நத்தக்காடையூருக்கு செல்ல வேண்டியிருப்பதால், படிப்பை இடைநிறுத்தம் செய்யும் சூழலும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி படிப்பை நிறுத்தும் பெண் குழந்தைகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் செய்துவிடும் சம்பவங்களும், எங்கள் கிராமத்தில் நடந்துள்ளன.

அதேபோல, பள்ளிக்கு செல்லபேருந்து வசதியும் இல்லை. மிதிவண்டியில் 5 கி.மீ. தொலைவைக் கடந்து செல்லவும் பெற்றோர் அச்சப்படுகின்றனர். இலவச பேருந்து பயண அட்டை வழங்கினாலும், பேருந்துக்குசெல்ல ஒன்றரை கி.மீ. கடந்து ஊஞ்சமரம் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, 172 பேர் படிக்கின்றனர். எனவே, அரசு மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "ஏற்கெனவே தரம்உயர்த்த வேண்டிய பள்ளிகளின் பட்டியலை கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டோம். கல்வித் துறையின் உயர் அலுவலர்கள்தான், இதனை முடிவு செய்வார்கள்.மீண்டும் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகளின் பட்டியல் கேட்கும்போதுதான், பழையகோட்டைப்புதூர் பள்ளியை மீண்டும் அனுப்ப முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x