Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

ஊரடங்கால் தடைபட்ட மின்நிலைய கட்டுமான பணி தொடக்கம் தமிழக மின்வாரியம் நடவடிக்கை

ஊரடங்கின்போது சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்து விட்டதால், மின்நிலைய கட்டுமானப் பணிகளை மின்வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த மின் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.48,412 கோடியில் திட்டங்கள்

தமிழ்நாடு மின்வாரியம் திருவள்ளூர் மாவட்டத்தில், வடசென்னையில் மூன்று 800 மெகாவாட், எண்ணூர் சிறப்பு திட்டத்தில் 1,320 மெகாவாட், எண்ணூர் விரிவாக்கத் திட்டத்தில் 660 மெகாவாட், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,320 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1,600 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையங்களை அமைத்து வருகிறது.

ரூ.48 ஆயிரத்து 412 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளை, மத்திய அரசின் பெல் நிறுவனமும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, தனியார் ஒப்பந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 7,500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்தஊர்களுக்குச் சென்று விட்டதால்பணிகள் பாதிக்கப்பட்டன.

தொழிலாளர்கள் திரும்பினர்

இந்நிலையில், ஊரடங்கில்தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வந்து விட்டனர். இதையடுத்து, மின்நிலையங்களை அமைக்கும் பணி முழு வீச்சில் தொடங்கி உள்ளது. எனவே, இப்பணிகள் நிறைவடைந்து விரைவில் இந்த மின்நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x