Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

அனைத்து தடைகளையும் தாண்டி 4 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் காஞ்சி, செங்கை மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் உறுதி

பெரும்புதூரில் முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களை பார்த்து இரட்டை இலை சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரித்தார்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

காஞ்சிபுரம்/பெரும்புதூர்/செங்கல்பட்டு

அனைத்து தடைகளையும் தாண்டி 4 ஆண்டு காலமாக அதிமுக அரசு மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், வரும் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து பெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கூட்டங்களில் அவர் பேசியது:

ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்கவும் ஆட்சியை கவிழ்க்கவும் பல்வேறுசூழ்ச்சிகளில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார். ஏற்கெனவே அதிமுக ஆட்சி ஓரிரு மாதத்தில் கவிழும் என்று ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் நான்காண்டு காலம் ஆட்சி நடைபெற்று உள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்து மத்திய அரசிடமிருந்து விருதுகளை வாங்கி இருக்கிறோம்.

நீர் மேலாண்மையில் தமிழகம் தேசிய விருதைப் பெற்றுள்ளது. மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. கல்வி, மின்சாரம், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசின் விருதுகளைப் பெற்று உள்ளோம். வரும் பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.

அனைத்து மாநில முதல்வர்களுடன் கரோனோ தடுப்பு பற்றி பிரதமர் ஆலோசனை மேற்கொண்டபோது, இதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்றார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள், சிறு வணிகர்கள், உத்திரமேரூரில் விவசாயிகளை சந்தித்து அவர்கள் குறைகளை முதல்வர் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x