Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

கோவை மாவட்டத்தில் 30,62,744 வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பட்டியலை வெளியிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறத்து ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ‘‘மாவட்டத்தில் 15,09,531 ஆண்கள், 15,52,799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30,62,744 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 37,667 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இனி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நடைபெறும். மேலும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், voters helpline app என்ற ஆண்ட்ராய்டு செயலியின் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது குறைபாடு குறித்த விவரத்தை, கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். வரும் தேர்தல்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர இவ்விவரங்கள் பயன்படுத்தப்படும்’’ என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், இறுதிப் பட்டியலில் 41,309 ஆண்கள், 50,657 பெண்கள், 45 மூன்றாம் பாலினத்தவர்கள் என 92,011 வாக்களர்கள் அதிகரித்துள்ளனர். அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,61,000 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 2,05,335 வாக்காளர்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x