Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு வரைவு பட்டியலைவிட ஒரு லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். படம்: ம.பிரபு

சென்னை

சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 1 லட்சத்து 16 ஆயிரத்து 656 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் இவற்றுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சத்து 39 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 99 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்கள், 1,015 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39 லட்சத்து 40 ஆயிரத்து 704 பேர் இருந்தனர்.

டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதில் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 887 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நடத்திய கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், பெயர் நீக்கம் கோரி வந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் 40,513 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில் சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. 19 லட்சத்து 95 ஆயிரத்து 581 ஆண்கள், 20 லட்சத்து 60 ஆயிரத்து 698 பெண்கள், 1081 இதர வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 1 லட்சத்து 16 ஆயிரத்து 656 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 208 வாக்காளர்கள், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜே.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பெர்மி வித்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x