Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியினர் தேசியக் கொடியுடன் கொடுத்த உற்சாக போஸ்.

பிரிஸ்பன்

பிரிஸ்பனில் நடைபெற்று வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

328 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் ரன்கள் ஏதும் சேர்க்காத நிலையிலும் , ரோஹித் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று இந்திய அணி கடைசி ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புஜாராவும் ஷுப்மன்கில்லும் அருமையான கூட்டணியை அமைத்தனர்.

சிறப்பாக பேட் செய்து வந்த ஷுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் நேதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே 24 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதன் பின்னர் ரிஷப் பந்த் மட்டையை சுழற்றினார். புஜாரா 211 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஒரு மணி நேரத்தில் 15 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழ்நிலையில் மயங்க் அகர்வால் 9 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், கம்மின்ஸ் ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்த 7 ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. தொடர்ந்து நேதன் லயன் ஓவரில் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள் விரட்ட நெருக்கடி குறைந்தது. வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர், போல்டானார். வாஷிங்டன் சுந்தர், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் 2 ரன்களில் ஜோஸ்ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரின் கடைசி பந்தை ரிஷப் பந்த் லாங்க் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க 18 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி 97 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் 138 பந்துகளில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

பிரிஸ்பன் மைதானத்தில் இதுவரை அதிகபட்சமாக 236 ரன்களை துரத்தியதுதான் அதிகபட்சமாகும். கடந்த 1951-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி சேஸிங் செய்து ஆஸி. அணியை வென்றதுதான் வரலாறு. அதன்பின் எந்த அணியும் இங்கு 4-வது இன்னிங்ஸில் சேஸிங் செய்து ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. இந்த முறையை 69 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்பர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டை கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ரிஷப் பந்த்தும், தொடர் நாயகனாக பாட் கம்மின்ஸும் தேர்வானார்கள்.

பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக ஆஸ்திரேலிய அணி 1988-ல் மேற்கிந்தியத் தீவுகளிடம்தோல்வி கண்டது. அதன் பின்னர் 32 ஆண்டுகள் தோல்வியை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிடம் தோல்வி கண்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர்மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரூ.5 கோடி போனஸ்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பதிவில்,"பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் அறிவிக்கப்படுகிறது. இந்த வெற்றியின் மதிப்பு எந்த எண்ணிக்கையையும் தாண்டியது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு உறுப்பினரும் சிறப்பாக செயல்பட்டார்கள்" எனத்தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிகேரளா – பெங்களூரு

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x