Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

கோவையில் வரும் 23,24-ம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் வரும் 23, 24-ம் தேதிகளில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜ வீதியில் காலை 8.20 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் பழனிசாமி, தொடர்ந்து செல்வபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் பிரச்சாரம் செய்கிறார். மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3.25 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தொடங்கி, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சுல்தான்பேட்டை வழியாக சூலூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு கொடிசியா வந்து, கோவையைச் சேர்ந்த தொழில்முனைவோரை சந்தித்துப் பேசுகிறார். முதல்நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

வரும் 24-ம் தேதி காலை 8 மணிக்கு கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சிங்காநல்லூர், பீளமேடு, காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை ரங்கநாதர் கோயில் ஆகிய இடங்களில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மதிய உணவுக்குப் பின் 3.15 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் தொடங்கி, துடியலூர், சாய்பாபா கோயில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோனியம்மன் கோயில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 8 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார்.

முதல்வரின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

முதல்வர் வருகையையொட்டி, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடங்கள், வழித்தடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல் துறை ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர்கள் ஸ்டாலின் (சட்டம் ஒழுங்கு), உமா (குற்றப்பிரிவு), முத்தரசு (போக்குவரத்து) ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x