Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பல நலத்திட்டங்கள் அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய முன்னுரிமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

‘‘நாட்டில் உள்ள விவசாயிகளின்வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கே மத்திய அரசு மிகப் பெரிய முன்னுரிமை அளிக்கிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

கர்நாடகாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமித் ஷா, பெங்களூருவில் நேற்றுமுன்தினம் காவலர் குடியிருப்பு ஒன்றை திறந்து வைத்தார். இந்நிலையில், பாகல்கோட் மாவட்டம் கெரக்கல்மட்டி கிராமத்தில் மாநில அரசின் பல்வேறு விவசாய நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுமத்தியில் ஆட்சி பொறுப்பேற்றது முதலாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் எக்காரணம் கொண்டும் மோடி அரசு சமரசம் செய்து கொள்ளாது.

விவசாயிகளின் வாழ்வு ஏற்றமடைய வேண்டும் என்பதற்காகவேஅவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். இன்று விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ், இதுபோன்ற திட்டத்தை தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வராதது ஏன்? காங்கிரஸின் நோக்கம் விவசாயிகளின் நலன் அல்ல. அவர்களை சுரண்டும் இடைத்தரகர்களின் நலன்தான் அக்கட்சிக்கு முக்கியம்.

இதன் காரணமாகவே, இடைத்தரகர்களை அடியோடு ஒழிக்கும் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்த்து வருகிறது. மேலும், அந்த சட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரத்திலும் அது ஈடுபட்டு வருகிறது.

நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே லட்சியம். இந்த இலக்கை அடைவதற்கு புதிய வேளாண் சட்டங்கள் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x