Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு நேரடியாக செல்ல முடியும் சுற்றுலாவை மேம்படுத்த 8 புதிய ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்சென்னையில் இருந்து வாரம்தோறும் இயக்கம்

குஜராத் மாநிலம் கெவாடியாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் 8 புதிய ரயில்களின் சேவையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையத்தில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்டோர். (உள்படம்) அலங்கரிக்கப்பட்டுள்ள ரயில்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பட்டேல் சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கெவாடியாவுக்கு 8 புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் சுயசார்பு திட்டம் மூலம் ரயில்வேயில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் முதலாவது துணைபிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிரம்மாண்ட சிலை குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியில், நர்மதை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகஉயரமாக (597 அடி) ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் கெவாடியா நகரை இணைக்கும் வகையில் 8 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கெவாடியாவில் நடந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய்ருபானி, டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் காணொலி மூலம் பங்கேற்றனர்.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், தெற்கு ரயில்வேபொது மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்று, சென்னைசென்ட்ரல் - கெவாடியா புதியவாராந்திர ரயில் சேவையைகொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது: குஜராத் மாநிலம் கெவாடியாவில் நிறுவப்பட்டுள்ள வல்லபபாய் பட்டேல் சிலை, நாட்டின்ஒற்றுமை சிலையாக விளங்குகிறது. இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் ‘பட்டேல் விஷன்’ என்ற பெயரில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே முதல் பசுமை ரயில் நிலையமாக கெவாடியா உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் இங்கு பல்வேறு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தினமும் 1 லட்சம் பேர் வந்து செல்லும் வகையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இங்குள்ள பழங்குடியினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தற்போது நாட்டின் பல்வேறுஇடங்களில் இருந்து கெவாடியாவுக்கு 8 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே இடத்துக்கு அதிக ரயில்கள் சேவை தொடங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த நேரடி ரயில் சேவை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் இங்கு எளிதாக வந்து செல்ல முடியும்.

ரயில்வே துறையில் சிக்னல்,புதிய பாதைகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வேயில் கடந்த 8 ஆண்டுகளில் புதிய பாதைகள், புதிய ரயில் சேவை, ரயில்களின் வேகம் அதிகரிப்பு என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிவேக ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. மத்திய அரசின் சுயசார்பு திட்டம் மூலம் ரயில்வேயில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

வாரணாசி, மும்பை தாதர், அகமதாபாத், டெல்லி நிஜாமுதீன், ரீவா (மத்திய பிரதேசம்), சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பிரதாப் நகர் (வதோதரா) இடையே இரு மார்க்கங்களில் தினசரி மின்சார ரயில்கள் ஆகிய 8 ரயில்கள் சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். கெவாடியா உள்ளிட்ட இடங்களில் புதிய ரயில் கட்டிடங்கள், அகல ரயில் பாதைகள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

கெவாடியாவில் இருந்து வரும் 20-ம் தேதி முதல் வாரம்தோறும் புதன்கிழமை காலை 9.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (09120) வியாழன் மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 24-ம் தேதி முதல் ஞாயிறுஇரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09119) செவ்வாய் அதிகாலை 3 மணிக்கு கெவாடியா செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x