Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

சீறிப்பாய்ந்த காளைகள்.. தாவிப் பிடித்து அடக்கிய வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உற்சாகம் சிறந்த வீரர், காளைக்கு கார்களை பரிசாக வழங்கிய முதல்வர், துணை முதல்வர்

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று ஆரவாரமாக நடந்தது. போட் டியை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த வீரர், சிறந்த காளைக்கு கார்களை பரிசாக வழங்கினர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் பிரசித்த பெற்ற அலங்காநல்லூர் ஜல் லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக முதல் வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.40 மணிக்கு அலங்காநல்லூர் வந்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடு பிடி வீரர்கள், ‘காளைகளை துன் புறுத்த மாட்டோம், அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றுவோம்’ என்று கூறி உறுதிமொழி ஏற்றனர். பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகி யோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

வாடிவாசலில் முதல் காளையாக அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு வீரர்கள் அடக்குவதற்கு காளை கள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவ்வப்போது வீரர்களை பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை அடக்கு பவர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், வீரர்களால் அந்தக் காளையை நெருங்க முடியவில்லை. சீறிப் பாய்ந்த அந்தக் காளை வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. இதையடுத்து, விழாக் குழு சார்பில் அமைச்சரின் காளைக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாத புரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த 719 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 வீரர்கள் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சாமர்த்தியமாக அடக்கினர். சில காளைகள் வீரர் களை தெறிக்கவிட்டு, யாரிடமும் பிடி படாமல் பாய்ந்து சென்றன. ஒவ் வொரு சுற்றிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விழாக் குழு சார்பில் பைக், தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண் டர், பட்டுச் சேலை உள்ளிட்ட பல் வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின்போது காளைகள் முட்டி காயமடைந்த 52 வீரர்களுக்கு அலங்காநல்லூர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக் காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்வரும், துணை முதல்வரும் சுமார் 45 நிமிடங்கள் கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்துப் பார்த் தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம் பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், எம்எல்ஏக் கள், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ஆர்.ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், தென்மண்டல ஐ.ஜி. முருகன், டிஐஜி ராஜேந்திரன் ஆகி யோர் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போட்டி முடிவில் அதிக காளை களை அடக்கிய வீரருக்கு முதல்வர் பழனிசாமி சார்பிலும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.

குருவித்துரை எம்.கே.எம். சந்தோ ஷின் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. மேலமடை வழக் கறிஞர் அருணின் காளை 2-ம் பரிசான 2 சக்கர வாகனத்தையும், கரந்தாங்கி யைச் சேர்ந்த மீசைக்காரரின் காளை மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்கக் காசையும் பெற்றன.

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த கண்ணன் 13 காளைகளை அடக்கி முதல் பரிசான காரையும், அரிட்டா பட்டி கருப்பண்ணன் 9 காளைகளை அடக்கி 2-ம் பரிசாக 3 நாட்டுக் கறவை மாடுகளையும், அலங்காநல்லூர் சக்திவேல் 8 காளைகளை அடக்கி 3-ம் பரிசாக ஒரு பவுன் தங்கக் காசை யும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x