Last Updated : 16 Jan, 2021 03:14 AM

 

Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: சுசில் குமாரின் வெற்றி ரகசியம்

ஒலிம்பிக்கில் ஒருமுறை பதக்கம் வெல்வதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சுசில் குமார். 2008-ம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுசில் குமார், அதற்கு அடுத்ததாக 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் காமன்வெல்த் போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பதக்கங்களை அள்ளியுள்ளார்.

மல்யுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பதன் ரகசியத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சுசில் குமார்.

“ஒரு நல்ல மல்யுத்த வீரருக்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம். கட்டுப்பாடுடன் இருந்தால்தான் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்க முடியும். நான் தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். அதன் பிறகு 5 முதல் 6 மணிநேரம் கடுமையான பயிற்சியை மேற்கொள்வேன்.

காலையில் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தும் நான், மாலையில் பயிற்சியாளருடன் இணைந்து மல்யுத்தம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுவேன். இரவு 9.30 மணிக்குள் உணவு அருந்திவிட்டு சிறிது தூரம் நடந்துவிட்டு தூங்கச் சென்றுவிடுவேன். எந்த அளவுக்கு சீக்கிரம் எழுகிறேனோ, அந்த அளவுக்கு சீக்கிரத்தில் தூங்கவும் சென்றுவிடுவேன். உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இவை இரண்டும் முக்கியம். மல்யுத்த வீரர்கள் தினமும் நிறைய சாப்பிடுவதாக ஒருசிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் மிகவும் அளவாகத்தான் சாப்பிடுகிறோம். தினசரி உணவில் பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்வேன். உடலை கட்டுக்கோப்பாக வைக்க உணவுக் கட்டுப்பாடும் அவசியம்” என்கிறார் சுசில் குமார். மல்யுத்த வீரர்கள் மட்டுமின்றி அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x