Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாளில் ஆஸி. அணி 274 ரன்கள் சேர்ப்பு

பிரிஸ்பன்

இந்திய அணிக்கு எதிரான கடைசிடெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில், கடைசி போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம்காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ஷர்துல்தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த வில் புகோவ்ஸ்கிக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்கினார். டேவிட் வார்னர் (1), முதல் ஓவரிலேயே மொகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹாரிஸை 5 ரன்களில் வெளியேற்றினார் ஷர்துல் தாக்குர்.17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் மார்னஸ் லபுஷேனுடன் இணைந்தார் ஸ்மித். நிதானமாக விளையாடிய ஸ்மித் 36 ரன்கள் எடுத்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மேத்யூ வேட் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய லபுஷேன் தனது 5-வது சதத்தைஅடித்தார். 4-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலைஹயில் இந்த ஜோடியை நடராஜன்பிரித்தார். மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்தில்ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் லபுஷேனையும் வெளியேற்றினார் நடராஜன். லபுஷேன் 204 பந்துகளில் 108 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 13 ரன்கள் இடைவெளியில் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார் நடராஜன். 213 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேமரூன் கிரீனுடன் இணைந்த டிம் பெயின் மேற்கொண்டு விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. டிம் பெயின் 38, கேமரூன் கிரீன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நடராஜன் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர், சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x