Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

சென்னை, புறநகரில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம் மாடுகளை அலங்கரித்து வழிபட்ட மக்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழாஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளை குளிக்க வைத்து அலங்கரித்த மக்கள் அவற்றுக்கு பொங்கல், புதுக்கரும்பு, புற்களை உணவாக வழங்கி வழிபட்டனர்.

இயற்கையோடு இணைந்து கொண்டாடப்படும் பொங்கல் திருநாளின் 3-ம் நாளான நேற்று உழவர்களுக்கும், சுமை தூக்குவோருக்கும் உதவிடும் மாடுகளின் உழைப்பை அங்கீகரித்து, அவற்றுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதிகளில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மாடுகளை மாட்டுப் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து கடலில் குளிக்க வைத்து சுத்தம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரைக்கு 15-ம் தேதி (நேற்று) முதல் 17-ம் தேதி (நாளை) வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் தங்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளில் மாடுகளை சுத்தம் செய்தனர்.

பின்னர் அவற்றின் கொம்புகளைசீவி, வண்ணம் பூசினர். புதுக்கயிறுகள், கழுத்தில் மணிகள், பூமாலை,நெட்டி மாலை போன்றவற்றை அணிவித்தனர். மாடுகளுக்கு திலகமிட்டு அலங்கரித்தனர்.

பிறகு, வழிபாடு நடத்தி, கற்பூரம் ஏற்றி குடும்பத்தினரோடு சேர்ந்து மாடுகளை வணங்கினர். பொங்கல், வடை, புதுக்கரும்பு, புற்களை உணவாக வழங்கி நன்றி செலுத்தினர்.

மாலையில், குடும்பத்தினர் அனைவரும் புத்தாடைகள் அணிந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து வந்து மகிழ்ந்தனர்.

அதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x