Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி சாலையில் ஆதார் அட்டைகளை வைத்து பொதுமக்கள் போராட்டம்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட உடுமலை கல்லாபுரம் கிராம மக்கள்.

திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வழியாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது, "உடுமலைப்பேட்டை கல்லாபுரம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 20 ஆண்டுகளாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். தெருவிளக்கு, சாக்கடைக் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை தேவைகளும் செய்துதரப் படவில்லை. இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையடுத்து, அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்தனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு அளித்த மனுவில், "கரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அனைவருக்கும் இணையவசதி இன்னும்கிடைக்கவில்லை. எனவே, கரோனா தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

மங்கலம் கிராம நீரை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "மங்கலம் மற்றும் பூமலூர் உள்ளடங்கிய 7 துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் விவசாயம், விசைத்தறிகள், வணிக வளாகங்கள், வீட்டு மின் இணைப்பு என 30 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், விவசாய மின் இணைப்பு, பெயர் மாற்றம் என பல்வேறு தேவைகளுக்கு கோவை செல்ல வேண்டியுள்ளது.

எனவே, இந்த பகுதி மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில், அருகே உள்ள பல்லடம் மற்றும் திருப்பூர் மின்பகிர்மானத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x