Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

பொங்கல் பண்டிகை காலத்தில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்க சிறப்பு வேட்டை தடுப்பு குழுக்கள் அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் காப்புக்காடுகளில் அரிய வகை வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் சிறப்பு வேட்டைத்தடுப்பு குழு அமைக்கப்பட்டு, வாகனச் சோதனை நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. இவை வேட்டையாடப்படுவதைதடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு வனத்துறை சார்பில் சிறப்பு வேட்டை தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காப்புக்காடுகளை ஒட்டிச் செல்லும் சாலைகளில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:

மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகை கால விடுமுறை நாட்களில் வன விலங்கு வேட்டை உள்ளிட்ட வனக்குற்றங்களைத் தடுக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு குழுவினர் உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லள்ளி, பிலிக்கல், மஞ்சுகொண்டப்பள்ளி ஆகிய 6 காப்புக்காடுகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர்.

மேலும் காவிரி ஆற்றங் கரையில் உள்ள தப்பகுளி, பசவேஸ்வரா கோயில் பகுதி, உக்னியம், ராசிமணல், அஜ்ஜிப்பாறை(மேக்கேதாட்டு) வரை உள்ள தமிழக வனப்பகுதிகளில் வெளியாட்கள் நுழையாத வகையில் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வன அலுவலர் செ.பிரபு கூறும்போது, ‘‘ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களிலும் பொங்கல் பண்டிகை கால தொடர் விடுமுறையை முன்னிட்டு வன உயிரினங்களின் பாதுகாப்புக்காக 72 வேட்டை தடுப்பு காவலர்கள் இடம் பெற்ற சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x