Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தருமபுரி, ஒகேனக்கல்லில் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

தருமபுரி

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கல் விழாவை ஒட்டி பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தருமபுரியில், மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் கலை பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. ‘பொங்கல் கலை நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

மயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பலவகையான நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் நடத்தப்பட்டன. ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அரூர் துணை ஆட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஹேமநாதன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் கோலப்போட்டிகள், இசை நாற்காலி நிகழ்ச்சி, பொங்கலிடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுடன் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நேற்று, தமிழக சுற்றுலா துறை சார்பில் பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அறிவுறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

விழாவின்போது, கிராமிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளை, நேற்று ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பயணிகள், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், ஒகேனக்கலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா விடுதியின் மேலாளர் உதயகுமார், ஒகேனக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x