Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதம் தை

தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதம் தை. இதனால் தான் "தை பொறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் தை பிறக்கும் நாளில் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர்களின் சிறப்பு மிக்க பண்டிகையாகும். நம் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பொங்கிப் பெருகட்டும் என, சூரியனை வேண்டிக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருவிழா. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருவிழா.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்விழா கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கல். மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல்.

நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் சூரியன், மழை, விவசாயத்துக்குப் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளாக போகியின்போது, வீட்டில் உள்ள தேவையற்ற, பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து, நல்லவை வரட்டும் என்பதே இதன் பொருள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அதே நாட்களில், இதர இந்திய மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் இந்த பண்டிகை வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான ஆண்டுகளில் ஜனவரி 13, 14, 15-ம் நாட்களில், தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இத்திருநாள் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இதேபோல, தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, மியான்மர், இந்தோனேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், ஐக்கிய அரபு அமீரகத்திலும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய அளவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா இதுவாகும். மேலும், ஜனவரி 13-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரில், கோதுமை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14, 15-ல் அசாம் மாநிலத்தில் மாஹ் பிகு என்ற பெயரில், நெல் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுப் பொங்கல் விழா, உழவர்களுக்கு மட்டுமின்றி, மக்கள் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்க வேண்டுமென இறைவனை வேண்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x