Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

கரோனா தொற்று பரவலை தடுக்க ஒகேனக்கல் அருவியில் குளிக்க 4 நாட்களுக்கு தடை தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கல் விழாவின்போது 4 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஒகேனக்கல். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்டு முழுக்க சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இதுதவிர, ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு ஆற்றின் அழகை ரசிப்பது, எண்ணெய் தேய்க்கும் தொழிலாளர்களிடம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொண்ட பின்னர் அருவியில் குளித்து மகிழ்வது, பாரம்பரிய முறையில் மீன் மற்றும் உணவு சமைத்துக் கொடுக்கும் பெண் தொழிலாளர்களிடம் உணவு ஆர்டர் கொடுத்து மதிய வேளையில் உணவு அருந்துவது ஆகியவையும் ஒகேனக்கல்லில் பிரதானம்.

அனைத்து நாட்களிலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவர். ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், ஆடி 1, ஆடி 18, சித்திரை 1 உள்ளிட்ட விழா நாட்களிலும், பள்ளி, கல்லூரி தொடர் விடுமுறை நேரங்களிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை தருவர். குறிப்பாக, தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவின் போது தொடர் விடுமுறை கிடைப்பதால் பலரும் குடும்பங்களாக, நண்பர்கள் குழுவாக என பலவகை குழுக்களாக இணைந்து ஒகேனக்கல் வருகை தருவர்.

ஆனால், தற்போது கரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத சூழல் நீடிக்கிறது. குறிப்பாக, மாற்றம் பெற்ற கரோனா வைரஸ் தொற்று அச்சமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறையின்போது அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் திரண்டால் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றச் செய்வதில் சிரமம் ஏற்படும். இது தொற்று பரவலுக்கு வழி வகுத்து விடும். இவற்றை கருத்தில் கொண்டு பொங்கல் விழாவின்போது 4 நாட்களுக்கு ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவலை தடுக்க 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சூழலுக்கு ஏற்ப அரசு அனுமதியுடன் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிலும் சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், பொங்கல் விழா நேரத்தில் ஒகேனக்கல்லுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரக்கூடும்.

எனவே, கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இன்று(14-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. மேலும், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை அறிவிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x