Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு ஒரு வகுப்பில் 25 பேருக்கு அனுமதி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள், மாணவர்விடுதிகள் ஜனவரி 19-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதள வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவ.16-ம் தேதிபள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம்வகுப்புகளுக்கு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கேற்ப, முதல்கட்டமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டது.

அனைத்து விதமான பள்ளிகளிலும் கடந்த 6, 7, 8-ம் தேதிகளில் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்திலும், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளை ஜனவரி 3-வது வாரத்தில்திறக்க முடிவுசெய்து, அதுகுறித்தஅறிக்கையை அரசின் பரிசீலனைக்கு கல்வித் துறை அனுப்பியது. அதன் அடிப்படையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

நோய்த் தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரியநிவாரணம் வழங்கி, தமிழக அரசுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும்தான் நோயின் தீவிரம் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த டிச.28-ம்தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்துகள், மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவித்த ஆலோசனையின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் ஜன.6 முதல் 8-ம் தேதி வரை கருத்து கோரப்பட்டது.

இந்த கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பாலான பெற்றோர்பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணவர்களின் நலன் கருதியும் 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள்ஜன.19-ம் தேதி முதல் திறக்கப்படும்.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருப்பது உட்படஅரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள்செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படஅனுமதி வழங்கப்படுகிறது.

இதுதவிர, அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்க ஏதுவாக வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கசுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி அரசு எடுத்து வரும் கரோனாதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாடத் திட்ட குறைப்பு மற்றும் விரிவான வழிகாட்டுதல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x