Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

ஆய்வு செய்து அறிக்கை தர 4 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமனம் புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை போராட்டத்தை கைவிட விவசாய சங்கங்கள் மறுப்பு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதில் பங்கேற்க பஞ்சாபின் அமர்தசரஸில் இருந்து டிராக்டரில் நேற்று டெல்லி புறப்பட்ட விவசாயிகள்.படம்: பிடிஐ

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட சிறப்புக் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

இதனிடையே, போராட்டத்தை திரும்பப் பெற விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகள் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு முன்பு 2-வது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாதம்:

எம்.எல்.சர்மா (விவசாயிகளின் வழக்கறிஞர்): வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சிறப்புக் குழுவின் முன்புஆஜராவதால் எந்த பயனும் கிடைக்காது என்று சில விவசாயிகள் கூறினர்.

தலைமை நீதிபதி பாப்டே: நில உரிமை பாதுகாக்கப்படும். ஒப்பந்த சாகுபடியால் எந்தவொரு விவசாயியும் நிலத்தை இழக்கமாட்டார்கள். அதற்கேற்ப இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். சட்டங்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது. எனினும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற வகையில் உத்தரவிட முடியாது. ஒரு சிறப்புக் குழுவை நியமிப்போம். அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும். விவசாயிகள் விரும்பினால் குழுவின் முன்பு ஆஜராகலாம். காலவரையின்றி போராட்டம் நடத்த விரும்பினால், அது அவர்களின் விருப்பம்.

எம்.எல்.சர்மா (விவசாயிகளின் வழக்கறிஞர்): இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுடன் பேச்சு நடத்த வரவில்லை.

தலைமை நீதிபதி: விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என பிரதமரிடம் நாங்கள் கேட்க முடியாது.

வழக்கறிஞர் வில்சன் (திமுக): வேளாண் சட்டங்களுக்கு தென்மாநில விவசாயிகள் ஆதரவு அளிக்கின்றனர் என்று அட்டர்னி ஜெனரல் கூறுவது தவறான தகவல். தமிழகம், ஆந்திராவில் போராட்டங்கள் நடக்கின்றன.

ஏ.பி.சிங் (விவசாயிகளின் வழக்கறிஞர்): உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று பாரதிய கிஷான் சங்கம் - பானுபிரிவின் மூத்த குடிமக்கள் வீடு திரும்புவதாக உறுதி அளித்துள்ளனர்.

சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே: குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். விவசாயிகளின் நிலம் பறிபோகாது என்று மீண்டும் உறுதி அளிக்கிறோம்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்: காலிஸ்தான் தீவிரவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியுள்ளது தொடர்பான உளவுத் துறையின் அறிக்கைகளை விரைவில் தாக்கல் செய்வோம். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு உள்ளது. டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை தடுக்க டெல்லி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆராய 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது.

இந்த குழுவில் வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, சர்வதேசஉணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, பாரதிய கிஷான் சங்கத்தின் (மன் பிரிவு) தலைவர் பூபிந்தர் சிங் மன், மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாய சங்க (ஷேத்கரி சங்கடனா) தலைவர் அனில் கன்வத் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

இந்த குழு அனைவருக்கும் பொதுவானது. பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த குழுவின் முன்பு ஆஜராகி தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.

போராட்டத்தை தொடர முடிவு

இந்நிலையில் விவசாய சங்கங்களின் மூத்த தலைவர்கள் ஹரிந்தர் லோக்வால், அபிமன்பு உள்ளிட்டோர் கூறும்போது, “இடைக்கால தடையை வரவேற்கிறோம். சிறப்பு குழு அமைத்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது முன்பு ஆஜராகவும் விரும்பவில்லை. எனினும், புதன்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் கூறும்போது, “சிறப்பு குழு அமைக்கப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேரும் மத்திய அரசின் ஆதரவாளர்கள். அவர்கள் எப்படி வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறிக்கைஅளிப்பார்கள். எங்களது போராட்டம் தொடரும். வரும் 15-ம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்துவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x