Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

கோவையில் பொங்கல் பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கோவையில் உள்ள பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். காய்கனி மார்க்கெட், உக்கடம் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நேற்று பொதுமக்கள் திரண்டனர். கரும்பு, மஞ்சள் குலை, வாழைத்தார், பூக்கள், மா இலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது.

கோவையில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது.

மழையையும் பொருட் படுத்தாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் சேலம் மாவட்டம் மேட்டூர், எடப்பாடி உள்ளிட்டபகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கொண்டுவரப் பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.500 வரைவிற்கப்பட்டது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ. 100-க்குவிற்கப்படுகிறது. இதே போல மஞ்சள் கொத்து ஜோடி ரூ.40 முதல்ரூ.50 வரையிலும், ஒரு கட்டு ஆவாரம்பூ மற்றும் பூளைப்பூ தலா ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் காய்கறிகளான மொச்சை, அரசாணிக்காய், பூசணி, சர்க்கரை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விற்பனையும் அதிகரித் துள்ளது.

கோவை பூமார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை, கள்ளிப்பாளையம், சத்தியமங்கலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை பூக்களும், ஆலாந்துறை, காரமடை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களும், தேவகோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துசம்பங்கி, அரளி பூக்களும், பெங்களூரு, ஓசூரு ஆகிய பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களும் கொண்டுவரப்படுகின்றன.

பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, முல்லை பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால்அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது. கோவை பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை பூ ரூ.1,800-க்கும், ஜாதி மல்லி ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி கிலோ ரூ.160, செண்டுமல்லி ரூ.60, துளசி ரூ.30, சம்பங்கி ரூ.140, அரளி ரூ.160, கோழிக்கொண்டை ரூ.80 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பட்டன் ரோஜா கிலோ ரூ.240 மற்றும் மா இலை ஒரு கட்டு ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.

காய்கறிகளில் கத்தரிக்காய் ரூ.40, தக்காளி ரூ.15 முதல் ரூ.20,பச்சைமிளகாய் ரூ.30, வெண்டைக் காய் ரூ.30, அவரைக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.30, முட்டைகோஸ் ரூ.15, சேனைக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20, சிறுகிழங்கு ரூ.40, பீன்ஸ் ரூ.50, பூசணிக்காய் ரூ.8, முருங்கைக் காய் ரூ.120,கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.20, சவ்சவ்ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.40, சேம்பு ரூ.50, சீனிக்கிழங்கு ரூ.25,தடியங்காய் ரூ.10, பூசணி ரூ.15,சிறிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x