Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

வாக்குகளுக்காக பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதாகவும், சூலூர் ஒன்றிய திமுக செயலர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பெண்ணைத் தாக்கியாகவும் புகார் தெரிவித்து, அதிமுக மகளிரணி சார்பில் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் இரவு கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தனர். அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, கொள்கை பரப்பு துணைச் செயலர் விந்தியா உள்ளிட்டோர் பேசினர். இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

பாலியல் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், ஒருவர் பாதிக்கப்பட்டதை பெரிதாக்கி, எந்த ஆதாரமும் இல்லாமல் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாக திமுக-வினர் பேசுவது, பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும். வாக்குகளுக்காக திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துகின்றனர்.

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பூங்கொடி திமுகவினரால் தாக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகிறார். திமுக சூலூர் ஒன்றியச் செயலர், ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் திமுகவினர், அதிமுகவினர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு முதலில் கோரிக்கை வைத்தது சட்டப்பேரவைத் துணைத் தலைவர்தான். அதிமுகவில் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், திமுகவில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊழல் என பல்வேறு முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். உலக பணக்காரர்கள் வரிசையில் திமுகவினர் உள்ளனர்.

மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை திமுகவினர் தடுக்கின்றனர். அமைச்சர் மற்றும் துணை முதல்வராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. எனவே, அவர் ஒருபோதும் முதல்வராக முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சின்ராஜ், கஸ்தூரிவாசு, கந்தசாமி மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

திமுகவினர் கைது

முன்னதாக, அதிமுக பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை அழைத்துச் செல்வதாகப் புகார் தெரிவித்தும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக ஆதிதிராவிடர் நலக் குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையிலான கட்சியினர், சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில், சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர், கண், காது, வாய் ஆகியவற்றை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு, அதிமுகவினருக்கு எதிராக கோஷமெழுப்பினர். இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி திமுகவினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x