Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

பாஜக நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீஸார் முடிவு

மதுரை திருப்பாலையில் கடந்த 10-ம் தேதி பாஜக சார்பில் பொங்கல் விழா நடந்தது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கு கொடிகள் கட்ட அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஹரிஹரசுதனின் கார் மீது தாக்குதல் நடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நாளில், புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் மீதும் தாக்குதல் நடந்தது. இது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பாஜக நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது: பாஜக நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தாலும் இதுவரை யாரும் பிரச்சினையில் ஈடுபட்டதில்லை. திருப்பாலையில் நடந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க பாஜக நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். பாஜக நிர்வாகிகள் கூறுகையில், ‘திருப்பாலையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் அதிமுக தரப்பில் யாரும் கண்டனம் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x