Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

நிலுவை சம்பளம் வழங்கக் கோரி சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா

நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வலியுறுத்தி, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி பொறியாளர் பிரிவு அடிப்படை பணியாளர் சங்கத்தினர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வலியுறுத்தி, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு மாநகராட்சி பொறியாளர் பிரிவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட பணியாளர்களிடம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலக உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு அறிவித்த கருணைத்தொகை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாகவும், இரண்டு தினங்களில் நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் கூறியதாவது:

மாதம் தோறும் 10-ம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. அதேபோல, பொங்கல் கருணை தொகை ரூ.3 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டும் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடும் நிலையில் எங்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் கருணை தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x